ஒரு தீவு. அந்த தீவில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே.
அந்த தீவில் குடியிருப்போர் மூன்று பேர். முகேஷ் மற்றும் அனில் ஆளுக்கொரு ரூபாய் வைத்திருந்தனர். மூர்த்தியிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு தென்னங்கன்று வளர்த்தான்.
முகேஷ் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்பதை எப்படியோ புரிந்து கொண்டு மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு மூன்று ரூபாய்கள். அதாவது மூர்த்தி அனில் இருவரிடமும் ஒவ்வொரு ரூபாயும் முகேஷிடம் ஒரு ரூபாய் மதிப்புள்ள மரமும் இருக்கிறது.
இதைக் கண்ட அனில் பணம் காய்ச்சி மரம் பிற்காலத்தில் பயன்படும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தனது ஒரு ரூபாயையும் சேர்த்து முகேஷிடமிருந்து இரண்டு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய்கள். அதாவது மரம் 2 ரூபாய், முகேஷிடம் 2 ரூபாய்.
மரத்தின் விலை ஏறுவதைக் கண்ட மூர்த்தி அதை விற்றதற்காக மனம் வருந்தி முகேஷிடம் 2 ரூபாய் கடன் வாங்கி அனிலிடம அவன் (அனில்)ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய்கள். அனிலிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 5 ரூபாய்கள்.
அடடே மரத்தின் விலை கூடிக்கொண்டே போகிறதே என்று முகேஷ் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்களுக்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 4 +2 =6 ரூபாய்கள்.
திடீரென்று அனிலுக்கு கவலைப் பிடித்துக்கொண்டது. மரம் நினைத்தபடி பலன் தராமல் போய்விட்டால் முகேஷ் எப்படி தன்னுடைய 2 ரூபாய் கடனை திருப்பித்தர முடியும். மூர்த்திக்கும் அதே கவலை பிடித்துக் கொண்டது. அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத தென்னங்கன்றின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன்.
இப்போது மரத்தை வாங்குவோர் இல்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய்கள் இருக்கிறது. முகேஷிடம் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன்
அனிலுக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர இயலும்.
முகேஷ் திவாலாகிப் போனான். முகேஷ் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். இப்பொது தீவின் மதிப்பு மீண்டும் 3 ரூபாய்கள். 6 ரூபாயில் இழந்த 3 ரூபாய்கள் எங்கே போயிற்று ?
கதை சொல்லும் நெறி.
எளிமை கருதி வர்த்தகம் மூவருக்குள்ளே நடப்பதாக காட்டப்பட்டது. அங்கே இன்னுமொரு மரம் இருந்து ரத்தன் என்பவன் சொந்தக்காரனாக இருந்திருந்தால் இன்னும் ருசிகரமான கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ரத்தன் விளையாட்டில் சேராமல் வேடிக்கைப் பார்த்தாலும் அவனுடைய மரத்தின் விலையும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்திருக்கும். அதற்குதகுந்தாற்போல் தீவின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.
இதைத் தவிர வெளித் தீவிலிருந்து யாரேனும் முதலீடு செய்ய முற்பட்டிருந்தால் பணபுழக்கம் அதிகரித்து தீவின் மதிப்பும் காகிதத்தில் உயர்ந்து கொண்டே போகும். புத்திசாலியான வெளியாள் செயற்கையாக விலையை ஏற்றி, மரத்தை சமயம் பார்த்து உள்ளுர்காரனுக்கே அதிக விலையில் விற்று தன்னுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொண்டு போயே போய் விடுவான். அப்போது தீவில் உள்ளவர்கள் ஏமாளிகளாக அமர்ந்திருக்க வேண்டியது தான்.
பங்குச் சந்தை செய்கின்ற குளறுபடிகளும் இப்படிபட்டதே. எவனொருவன் வேகமாய் பணமாக மாற்றிக் கொள்வானோ அவனே புத்திசாலி. பங்கு காகிதத்தை நம்பி பணம் கொடுத்த வங்கிகளுக்கும், கடன் வாங்கி முதலீடு செய்வோருக்கும் கடைசியில் தலையிலே துண்டு.
No comments:
Post a Comment